மூணாறு அருகே நடந்த சோகம் நிலச்சரிவு பலி 52 ஆக உயர்வு: 19 பேரை தேடும் பணி தொடரும்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத்தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். கண்ணன் தேவன் தேயிலை நிறுவன கணக்கின்படி குடியிருப்புகளில் மொத்தம் 83 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை 49 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. அவை அழுகி இருந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டன.  

இந்நிலையில், 5வது நாளாக நேற்றும் மீட்புப்பணி நடந்தது. நேற்று மழை சற்று குறைவாக இருந்ததால் மீட்புப்பணி வேகமாக நடந்தது. தேசிய பேரிடர் மீட்புப்படை, போலீஸ், தீயணைப்புப்படை, வனத்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை உட்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 3 பேரின் சடலங்கள்  மீட்கப்பட்டன. அருகில் உள்ள ஆற்றில் இருந்து இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மண்ணுக்கடியில் 19 பேர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

* மிகப்பெரிய நிலச்சரிவு

கேரளாவில் இதற்கு முன்பும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மலப்புரம் மாவட்டம், கவளப்பாறையில் நடந்த நிலச்சரிவில் 48 பேர் பலியாயினர். இதுதான், கேரளாவில் நடந்த நிலச்சரிவுகளில் பெரியதாக இருந்தது. தற்போது, மூணாறு நிலச்சரிவில் இதுவரை 52 பேர் பலியாகி உள்ளனர்.

* கடைசி சடலத்தை மீட்கும் வரையில் பணி தொடரும்

அரக்கேணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் தான் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தலைமை கமாண்டரான பெண் அதிகாரி ரேகா கூறுகையில், ‘‘நாங்கள் மீட்பு பணிக்கு வரும்போது மோசமான காலநிலை இருந்தது. இதனால், மீட்பு பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. 10 முதல் 15 அடி உயர பாறைகளும் குவிந்து கிடந்தன. தண்ணீரை எவ்வளவு வெளியேற்றினாலும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. பல இடங்களில் சகதியும் சேர்ந்தது. இதனால், மீட்பு பணியை பலமுறை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுவரை 52 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடைசி உடல் கிடைக்கும் வரையில் மீட்புபணி தொடரும்,’’ என்றார்.

Related Stories: