தனியார் டிரான்ஸ்பார்மர் கம்பெனியில் காவலாளியை தாக்கி ரூ.12 லட்சம் காப்பர் கொள்ளை

குன்றத்தூர்: திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில், காவலாளியை தாக்கி சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். குன்றத்தூர், மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட்டில், டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் (52) என்பவர், காவலாளியாக வேலை செய்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவித்து, கம்பெனி திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அங்கு பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காவலாளி ரமேஷ், கம்பெனியில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில், கம்பெனியில் நுழைந்த மர்மநபர்கள், அங்கு தூங்கி கொண்டிருந்த ரமேஷை சரமாரியாக தாக்கி, வெளியே இழுத்து வந்து கட்டிப் போட்டனர். பின்னர், கம்பெனியில் இருந்த 2 டன் காப்பர் கம்பிகளை, அவர்கள் கொண்டு வந்த வேனில் ஏற்றி, தப்பி சென்றனர். இதையடுத்து நேற்று காலை வழக்கும்போல் வேலைக்கு வந்த ஊழியர்கள், காவலாளி ரமேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், கொள்ளையடிக்கப்பட்ட காப்பர்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிதாக திறக்கப்பட்ட கம்பெனியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை கண்காணித்த மர்மநபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். குறிப்பாக, கம்பெனியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் முழுமையாக அமைக்கவில்லை. இதனால், கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே திருமுடிவாக்கம் பகுதியில் காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: