அருப்புக்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டுனர்கள் அவதி

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கல்லூரி சாலை, நகரிலிருந்து மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலைக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இப்பகுதியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பள்ளி, கல்லூரி நேரங்களில் இந்த சாலை வழியாக அதிகளவில் மாணவ, மாணவிகள் சென்று வருவார்கள். கொரோனா பரவலை தடுக்க, இப்பகுதியில் உள்ள நாடார் மயானம் எதிரில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில் இந்த சாலையோரத்தில் உள்ள மழைநீர் செல்லும் ஓடையை தனியார் சிலர் ஆக்கிரமித்து பாலங்களை கட்டியுள்ளனர்.

மேலும் கட்டிட கழிவுகளையும் சாலையில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ேமலும் இரவு நேரங்களில் டூவீலர்கள் மற்றும் சைக்கிளில் செல்வோர் கீழே தவறி விழுந்து காயமடைகின்றனர். இதனால் இப்பகுதிமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பாலங்களை இடித்து அப்புறப்படுத்துவதுடன், சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் வாகினி கூறுகையில், ‘‘சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பாலத்தை இடிக்கவும், கட்டிட கழிவுகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அகற்றாத பட்சத்தில் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: