கொரோனா ஊரடங்கையொட்டி திருவிழாக்கள் தடைபட்டதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பரிகார பூஜைகள்: பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது

திருச்சி: கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் நடக்காததால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று பரிகார பூஜைகள் நடந்தது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகளின் உத்தரவின்படி ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெரிய கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நித்தியப்படி கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. பங்குனி தேர் திருவிழா (ஆதி பிரம்மா திருநாள்), சித்திரை தேர் திருவிழா (விருப்பன் திருநாள்) பெருமாள், தாயார் கோடை திருவிழா மற்றும் பெருமாள், தாயார் வசந்த உற்சவ நாட்கள் ஆகியவை நடைபெறவில்லை.

பஞ்சபர்வ நாட்களான ஏகாதசி, அமாவாசை மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் கோயில் வளாகத்தினுள்ளேயே குறைந்த எண்ணிக்கையிலான கைங்கர்யர்களை கொண்டு அரசின் வழிகாட்டுதலின்படி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாக்கள் நடைபெறாமல் தடை பெற்றதால் இதற்கான பரிகார ஹோமம் சகஸ்ர கலசாபிஷேகம் (1008 கலசாபிஷேகம்) நேற்று கோவில் வளாகத்திலுள்ள அர்ஜுன மண்டபத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இதில் ஈடுபட்ட கைங்கர்யரர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் அரசு வழிகாட்டுதலின்படியும் நடைபெற்றது என கோயில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: