விடிய, விடிய காற்றுடன் கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை மின்தடையால் இரவு முழுவதும் பொதுமக்கள் அவதி

கொடைக்கானல்:  கொடைக்கானலில் விடிய, விடிய காற்றுடன் மழை கொட்டியதால், இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக  பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று வேகமாக வீசுவதால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுவதால் மின்தடை ஏற்படுகிறது. இதனால், கடந்த 3 நாட்களுக்கு மேல் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விடிய, விடிய சாரல் தொடர்ந்தது.

இதனிடையே நள்ளிரவு முதல் நகரில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால், நகரமே இருளில் மூழ்கியது. நகரில் எங்காவது ஓரிடத்தில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தால் மின்தடை ஏற்பட்டு விடுகிறது. நேற்று காலைதான் மின்விநியோகம் சீரானது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கொடைக்கானலில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காற்றுடன் மழை பெய்து வருவதால், உயர் மின்அழுத்த வடக்கம்பிகள் மீது விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற, மின்வாரிய அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மின்தடை ஏற்படுவதே தடுக்க முடியும். ஆனால், இது குறித்து பலமுறை வருவாய்த்துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை’ என்றனர். 

Related Stories: