தொடர்ந்து முறைகேடு நடப்பதால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: இ-பாஸ் வழங்குவதில் தொடர்ந்து முறைகேடு நடப்பதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அயனாவரம் சோலை தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தாண்டமுத்து (43), தனது ஆட்டோ உரிமத்தை புதுப்பிக்க அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றபோது அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறி, ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் தாண்டமுத்துக்கு புதிய ஆட்டோ வாங்க திமுக இளைஞரணி சார்பில் நிதிஉதவி நேற்று வழங்கினார். அப்போது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, ரங்கநாதன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனாவல் 43 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்று நான் சொன்னேன். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், நான் பொய் சொன்னேன் என்றார். என் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஏன் என் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் 43 டாக்டர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர் என்று ஐஎம்ஏ கூறியுள்ளது. இ-பாஸ் வழங்குவதில் தொடர்ந்து முறைகேடு நடந்து வருகிறது. அதை ரத்து செய்ய  வேண்டும். நான் தூத்துக்குடி சென்றபோது இ-பாஸ் வாங்கினேனா, வாங்கவில்லையா என்று கூறுகின்றனர். இ-பாஸ் இல்லாமலே நான் போனேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என் மேல் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உதயநிதி ஒரு சாக்லேட் பாய் என்று அமைச்சர் ஜெயக்குமார்  சொல்கிறார். சாக்லேட் பாய் என்பது கெட்ட வார்த்தை இல்லை. ஆனால் அதை சொல்பவர் ஒரு “ப்ளே பாய்”.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: