தேனி மாவட்டத்தில் சூறாவளிக்கு வாழைகள் நாசம்

உத்தமபாளையம்/போடி: தேனி மாவட்டம், போடி, தேவாரம், உத்தமபாளையம், கூடலூர், வருசநாடு பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டது. தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டிய மூணான்டிபட்டியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான தோட்டங்களில் இருந்த தென்னை, இலவம், வாகை மரங்கள் என ஆயிரக்கணக்கான மரங்கள் சூறாவளி காற்றுக்கு சாய்ந்து விழுந்தன. அவரை, பீன்ஸ், தக்காளிச் செடிகள் என ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமானதாக கூறுகின்றனர். உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி தலைமையிலான வருவாய்த்துறையினர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

இருளில் மூழ்கிய கிராமங்கள்: தேவாரத்தை சுற்றியுள்ள டி.ரெங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல ஊர்களிலில் இருந்த மின்கம்பங்கள் சூறாவளி காற்றுக்கு சாய்ந்தன; மின்வயர்கள் அறுந்து தொங்கின. இதனால், மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் இரவில் தூக்கத்த இழந்தனர். போடி பகுதியில் பறந்த தகரங்கள்: போடி பகுதியில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்கு 500க்கும் மேற்பட்ட மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. மின்வயர்கள் அறுந்து விழுந்தன. போடியில் தேவாரம் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்ம் மீது மரங்கள் விழுந்து தீப்பிடித்தது. இதனால், போடி நகர் இருளில் மூழ்கியது. மின்வாரிய அதிகாரிகள் மரங்களை வெட்டி அகற்றி, அதிகாலை 4 மணியளவில் மின்இணைப்பு கொடுத்தனர்.  பொதுமக்கள் இரவு தூக்கத்தை இழந்தனர். நேற்று நகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டன. போடி அருகே, தேவர் காலனியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் தகரங்கள், சூறைக்காற்றுக்கு பறந்தன. 5க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன.

சூலப்புரத்தில் 10 வீடுகள் சூறை: போடி அருகே, சிலமலை ஊராட்சி சூலப்புரத்தில் சூறாவளி காற்றுக்கு, 10க்கும் மேற்பட்ட வீடுகளின் தகரங்கள் பறந்தன. 15க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. 30க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. ராசிங்காபுரத்தில் மெயின்ரோட்டில் மின்கம்பம் குறுக்கே விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல வீடுகள் மற்றும் ஒர்க்‌ஷாப்களின் தகரங்கள் சூறைக்காற்றுக்கு பறந்தன. அறுவடைக்கு தயாரான வாழை நாசம்: உத்தமபாளையம்: உத்தமபாளையம் பகுதியில் உள்ள ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், அறுவடைக்கு தயாரான 4 ஆயிரத்துக்கும் மேலான வாழை மரங்கள் சாய்ந்து இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அறிவித்துள்ளனர். கூடலூர்: கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு, தம்மணம்பட்டி, 18ம் கால்வாய் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் ஒரு வாரத்தில் பலனுக்கு வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சேத மதிப்பை வருவாய்த்துறையினர் கணக்கிட்டு வருகின்றனர். கூடலூர் மெயின் ரோட்டில் இருந்த 10க்கும் மேற்பட்ட மரங்கள் சூறாவளி காற்றுக்கு சாய்ந்தன. பல வீடுகளில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகள் கீழே விழுந்தன. கூடலூரில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்ம், அரண்மனைபுதூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் இருந்த முருங்கை, இலவம், தென்னை ஆகியவை மழையுடன் வீசிய சூறாவளிக்கு சாய்ந்து விழுந்தன. பாலூத்து, ஆத்தங்கரைப்பட்டி, அண்ணாநகர், அய்யனார்கோவில், கடமலைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் முருங்கை, தென்னை உள்ளிட்ட மரங்களும், பீன்ஸ் உள்ளிட்ட விளை பொருட்களும் சூறாவளிக்கு சேதமடைந்துள்ளன.

2 பசுமாடுகள் பலி: குமணன்தொழு அருகே, பரமக்குடி கிராமத்தில், சூறாவளி காற்றுக்கு இலவமரம் சாய்ந்து விழுந்ததில், மரத்தின் கீழ் சிக்கிய ராஜீவ்காந்தி என்பவரின் பசு மாடு இறந்தது. வருசநாடு அருகே, முருக்கோடை கிராமத்தில் வீரணன் என்பவரது தோட்டத்தில் தேக்கு மரம் சாய்ந்து, அவரது பசுமாடு பலியானது. கடமலைக்குண்டுவில் முனியாண்டி நாயக்கர் தெருவில் மின்கம்பம் கீழே சாய்ந்தது மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கடமலைக்குண்டு அருகே சிதம்பரம் விலக்கு கிராமத்தில் கருணை இல்லத்தில் கதவு தகரம் விழுந்ததால், இரண்டு முதியவர் பலத்த காயம் அடைந்தனர். மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள், ஒன்றிய ஆணையாளர்கள் திருப்பதிவாசகன், ரவிச்சந்திரன், மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சந்திரா சந்தோஷம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories: