ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்னை மரங்களை பிடுங்கி எறிந்த சூறாவளி

ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வீசிய பலத்த சூறாவளிக்கு ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் ஆறுதல் கூறினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. அத்துடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதியில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ராஜபாளையம் அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், சேத்தூர் அய்யனார் கோயில், சாஸ்தா கோயில் போன்ற பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. சேத்தூர் பகுதியில் உள்ள தேங்காய் பேட்டையின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேளாண்துறை அரசு செயலர், விருதுநகர் கலெக்டர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார். பாதிப்புகள் குறித்து வேளாண்மை துறை அதிகாரி தனலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறுகையில், ``ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாய்ந்த தென்னை மரங்களுக்கு இன்றுவரை அரசு இழப்பீடு வழங்கவில்லை. இந்த சூறாவளிக்காற்றால் ஏராளமான தென்னை மரங்களில் இருந்து மட்டைகள், தேங்காய்கள் விழுந்து விட்டன. இதனால் ஒரு வருடத்திற்கு தேங்காய் விளைச்சல் இருக்காது. எங்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: