தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான்; நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்க தயார்...முதல்வர் பழனிசாமி பேட்டி

திண்டுக்கல்: கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் சென்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் 42 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 3,500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.88 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன். அரசு  நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர் என்றார். 43,528 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க படுக்கைகள் தயார் நிலையில்  உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைய உள்ளது. புதிய கலை அறிவியல் கல்லூரி துவக்கப்படும். உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும். எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார். வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை. நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்க தயார் என்றார்.

Related Stories: