மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை நீடிப்பு: வால்பாறையில் ராட்சத மரங்கள் விழுந்து வீடுகள் சேதம்..!!!

திருப்பூர்:  மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் பழமை வாய்ந்த ராட்சத மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மங்களம் சாலை-கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதன்தொடர்ச்சியாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் குரங்கு அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் பலத்த சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. வரட்டுப்பாறை எஸ்டேட்டில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து தொழிலாளர் குடியிருப்பின் மீது விழுந்தது. இதில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனைத்தொடர்ந்து கொடைக்கானலில் 7 ரோடு பகுதியில் பலத்த காற்று வீசியதன் காரணமாக ராட்சத மரங்கள் முறிந்து விழுந்ததில் 5 கடைகள் சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து மின்கம்பங்கள் அறுந்து விழுந்ததில் 8-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது. மேலும், வரசநாடு, மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Related Stories: