லெபனான் வெடிவிபத்து போல சென்னையிலும் நடந்துவிடுமோ?: சுங்கத்துறை அதிகாரிகள் அச்சம்..!!

சென்னை: கடந்த 6 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அமோனியம் நைட்ரேட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளான லெபனானின் பைரூட் என்ற தலைநகரத்தில் உள்ள துறைமுகத்தில் 2450 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த சம்பவம் நேற்று உலகளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வெடிபொருட்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் சுமார் 6 ஆண்டுகாலமாக லெபனான் துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அது முறையான பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தான் வெடித்தது என்று சர்வதேச அளவில் செய்தி வெளியான நிலையில், தற்போது சென்னை துறைமுகத்திலும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட், 37 கண்டெய்னரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு கொரியாவில் இருந்து அமோனியம் நைட்ரேட் 740 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கரூரை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்திருக்கிறது. ஆனால் அதற்கு உரிய அனுமதி பெறாத காரணத்தினால் அதனை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை என்பது அந்த நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த அமோனியம் நைட்ரேட் எதற்காக வாங்கப்பட்டது என்பது தொடர்பாக கரூரை சேர்ந்த தனியார் நிறுவனம் முறையான பதிலளிக்காத காரணத்தினால் அவர்களது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் லெபனான் வெடிவிபத்து போல சென்னையிலும் நடந்துவிடுமோ என்ற அச்சம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 6 ஆண்டு காலமாக சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டின் நிலை என்ன? இறக்குமதி செய்யப்பட்ட லெபனான் உரிய பாதுகாப்புடன் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளும், பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Related Stories: