அமைச்சர்களை தொடர்ந்து பாதிப்பு எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், ராமலிங்கத்திற்கு கொரோனா: எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கும் தொற்று

சென்னை: தமிழகத்தில் அமைச்சர்களை தொடர்ந்து எம்பிக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், ஒரத்த நாடு திமுக எம்எல்ஏ ராமச் சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும் நேற்று தொற்று உறுதியானது. தமிழகத்தில் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கொரோனாவால் சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது எம்பிக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாகை தொகுதி கம்யூனிஸ்ட் எம்பி செல்வராசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று, சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரத்துக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னையில் உள்ள வீட்டில், தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தனது டிவிட்டர் பதிவில்,‘‘ என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுங்கள்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று முன்னாள் அமைச்சரும், பாஜ மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜ மாநில தலைவர் முருகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த போது, அவரது நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இந்நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்ததில் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், ‘‘எனக்கு லேசாக கொரோனா அறிகுறி இருப்பது போல உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் என்னை நானே தனிமைப்படுத்தி கொள்கிறேன். கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன். வேலுண்டு, வினையில்லை’’ என்று கூறியுள்ளார். நாகை மாவட்டத்தை பிரித்து 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நாகை மற்றும் மயிலாடுதுறையில் கடந்த 30ம்தேதி நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாநில முதன்மை செயலாளர் பனீந்திரரெட்டி, தஞ்சை சரக டிஜஜி ரூபேஷ் குமார் மீனா மற்றும் நாகை எம்பி செல்வராசு, மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் எம்எல்ஏக்கள், நாகை கலெக்டர் பிரவின்பிநாயர், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி லலிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், நாகை எம்பி செல்வராசுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு (72) நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அழைத்து செல்லப்பட்டார். இதனால் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு (75) நேற்று முன்தினம் மாலை திடீரென இதயம் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது.  தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related Stories: