திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சாலை விரிவாக்கம் காரணமாக வீடுகளை இடிக்க நோட்டீஸ்...!!! மாற்றுப்பாதையில் சாலையமைக்க மக்கள் கோரிக்கை!!!

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சாலை விரிவாக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் இடிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதால் சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர்-மயிலாடுதுறை இடையே உள்ள முடிகொண்டான் கிராமம் வழியாக சாலை விரிவாக்கப்பணி நடைபெற உள்ளது. இந்த மாநில நெடுஞ்சாலையின் 2 பக்கமும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும் கடைகளும் உள்ளன.

தற்போது சென்னை கன்னியாகுமரி தொழிற்தட சாலை அமைக்கும் திட்டத்தில் முடிகொண்டான் சாலையில் உள்ள 70க்கும் மேற்பட்ட வீடுகளின் முன் பகுதியை இடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை அறிந்த கிராம மக்கள் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடமும் சாலை விரிவாக்க திட்டம் தொடர்பாக மாற்று வழிகளில் அமைக்கோரி பலமுறை மனு அளித்துள்ளனர். இதனை ஏற்காமல் சாலையின் இருபுறங்களிலும் உள்ள முன்பகுதி வீடுகளை இடிப்பதற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு கிராம மக்கள் அரசாங்கம் கொடுக்கும் பணத்தினை பயன்படுத்தி நிலமோ அல்லது வீடோ வாங்க முடியாது என கூறியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக, சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க தங்களது நிலங்களை தருவதாக கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தினால், ஏழை குடும்பத்தினை சேர்ந்தவர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் ஏற்கனவே வீடானது சிறிய அளவில் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் முன் பகுதியை இடித்தால், மேலும் அந்த வீட்டில் தொடர்ந்து வசிக்க முடியாது நிலைதான் ஏற்படும் என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே சாலையை மாற்று பாதையில் அமைக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: