ஊரடங்கால் சதுர்த்தி விழா கேள்விக்குறி விநாயகர் சிலைகள் விற்பனையாகுமா? மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் கிராமத்தில் பல குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி விழா நடக்குமா, செய்து வைத்துள்ள விநாயகர் சிலைகள் விற்பனையாகுமா என்று தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் கிராமத்தில் களிமண் கொண்டு பலவிதமான கடவுள் சிலைகள், நவராத்திரிக்காக கொலு பொம்மைகளை மண்பாண்டம் தொழில் செய்யும் பல குடும்பத்தினர் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்தும் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இந்த தொழிலில் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அரும்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், நாங்கள் 25 ஆண்டுகளாக இந்த மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான களிமண் பொம்மைகள் மற்றும் விநாயகர் சிலைகள் செய்து அதன் மூலம் வாழ்வாதாரம் ஈட்டிவரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி நெருங்குவதையொட்டி களிமண் மற்றும் காகிதகூழ், கிழங்கு மாவு கொண்டு பல விதங்களில் விநாயகர் சிலைகள் செய்து வருகிறோம். இந்த சிலைகள் சுமார் ஒன்றரை அடி முதல் 15 அடி வரை தயாரிக்கப்படுகிறது. மேலும் விநாயகர் சிலைகள் ராஜகணபதி, தர்பார் கணபதி, டிராகன் கணபதி, வீரகணபதி என 60 வடிவங்களில் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நவராத்திரிக்காக கொலு பொம்மைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக காத்திருக் கின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை சிலைகள், பொம்மைகள் விற்பனை ஆகவில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவுக் காக சிலைகள் விற்பனை ஆகுமா? என்ற எதிர்பார்ப்போடு தாங்கள் காத்திருப்பதாகவும் அதனை நம்பியே சிலைகள், பொம்மைகளை செய்துள்ளதாகவும் கூறினார்.

Related Stories: