மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை. இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை: எம்.எல்.ஏ கருணாஸ் அறிக்கை

சென்னை: மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை. இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை என  எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை -2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து  வருகின்றனர். இதற்கிடையே, புதிய கல்விக்கொள்கையால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும்  உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  

தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்விமுறை இடம்பெற்றிருப்பது வேதனையை அளித்திருக்கிறது. அதேபோல் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் தொடர்ந்து பின்பற்றப்படும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என , தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக்கொள்கை வேதனை அளிப்பதாக மத்திய அரசின் சதிகார போக்கை முதல்வர் கண்டித்துள்ளார். அதை வரவேற்கிறேன். அதேசமயம் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும். மும்மொழி திட்டத்தை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை. இருமொழிக்கொள்கை ஏமாற்று கொள்கை. ஒருமொழிக்கொள்கையே உரிமைக்கொள்கை என்பதை எதிர்காலத்தில் நாம் நிலை நிறுத்த வேண்டும். அந்த ஒருமொழிக்கொள்கையான தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: