ரூ.11.000 அன்பளிப்பு; பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகளால் ராக்கி கட்ட வேண்டும்...விநோதமாக ஜாமீன் வழங்கிய ம.பி உயர்நீதிமன்றம்

போபால்: சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை வடமாநிலங்கள் உட்பட பல பகுதிகளிலும் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும், சகோதாரர்களாக கருதுபவர்களுக்கும் ரக்ஷா பந்தன் நாளில்  கையில் கயிறு கட்டி தங்களது பாசத்தை வெளிப்படுத்துவார்கள். வட இந்தியா மட்டுமின்றி தமிழகத்தில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரக்ஷா பந்தன்னை முன்னிட்டு மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையுடன் ஒருவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனைச் சேர்ந்த விக்ரம் பாக்ரி என்பவர், 30 வயது பெண்  ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறி நடந்ததாக கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணின்  கைகளால் ராக்கி கயிறு கட்ட வேண்டும் என்றும், அதற்கு 11 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றும் நிபந்தைனையுடன் ஜாமின் வழக்கியது.

ரக்‌ஷா பந்தன் அன்று, சகோதரிகள் ராக்கி கயிறு கட்டிய பின்னர், சகோதரர்கள் அவர்களுக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டும் என்பது வழக்கமாகும். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் புதுத்துணி மற்றும்  இனிப்புகள் வாங்க 5 ஆயிரம் ரூபாய் தனியாக அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: