புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு திமுக தோழமைக் கட்சிகள் கடிதம்...!!!

சென்னை: இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என,  கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக்  கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இதில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு  கிளம்பியது. இதற்கிடையே, கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு திடீரென ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து நாடு தழுவிய விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இந்த அறிக்கையின் சாரத்தை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து அலசிக்கொண்டுள்ளனர்.  சாதகமும் பாதகமும் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. இதற்கிடையே, புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை  நடத்தவுள்ளார்.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 11 திமுக  தோழமைக்  கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், மும்மொழி திட்டத்தை திணிக்கும் கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி சமஸ்கிருதத்தை திணிக்க  கல்விக்கொள்கையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: