ராமர் கோயில் பூமி பூஜைக்காக நடத்தப்படுகிறதா? காங். மூத்த தலைவர் கமல்நாத் வீட்டில் அனுமன் பாராயணம்: தொண்டர்களுக்கும் அழைப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் வீட்டில் நாளை அனுமன் சிறப்பு பாராயணம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் நாளை மறுதினம் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், போபாலில் உள்ள தனது வீட்டில் நாளை அனுமன் சிறப்பு பாராயணம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பூபேந்திர குப்தா கூறுகையில், “கமல்நாத் வீட்டில் செவ்வாய்க்கிழமை அனுமன் பாராயணம் நடைபெற உள்ளது. அவர், தீவிர அனுமன் பக்தர். கட்சியை சேர்ந்த தலைவர்களையும், தொண்டர்களையும் கூட தனது வீட்டிலேயே அனுமன் பாராயணம் செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் பின்னணி ஒன்றும் இல்லை. செவ்வாய்க்கிழமை மிகவும் நல்ல நாள். இது முற்றிலும் ஆன்மிக நிகழ்வாகும். நிகழ்ச்சியில் கொரோனா நோய் தொற்று வழிகாட்டுதல்கள் அனைத்தும் பின்பற்றப்படும்,” என்றார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை கமல்நாத் நேற்று முன்தினம் வரவேற்றார். ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, அனைத்து மக்களின் விருப்பமாகும்,’ என்று அவர் கூறினார்.

* 101 அடி உயர அனுமன் சிலை

சில ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினராக கமல்நாத் இருந்தபோது, 101 அடி உயரமுள்ள அனுமன் சிலையை தனது தொகுதியான சின்த்வாராவில் அவர் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: