செய்யூர் தாலுகா பகுதிகளில் சாலைகளில் காயவைக்கும் தானியங்களால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அவதி

செய்யூர்: செய்யூர் தாலுகாவில் முக்கிய சாலைகளில் விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்த, நெல், கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை சாலையிலேயே கொட்டி காய வைத்து ஜலித்து சுத்தம் செய்யும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்தாமூர்-செய்யூர், சித்தாமூர்-சூனாம்பேடு, கூவத்தூர்-மதுராந்தகம், பவுஞ்சூர்-செய்யூர், சூனாம்பேடு-வெண்ணாங்குபட்டு ஆகியவை முக்கிய சாலைகளாக கருதப்படுகிறது. இச்சாலைகள், வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், செய்யூர் தாலுகா பகுதிகளில் வசிக்கும்  பெரும்பாலான விவசாயிகள் நெல் மற்றும் கேழ்வரகு பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். நெல், கேழ்வரகு அறுவடை செய்யும் விவசாயிகள் அவைகளை கொட்டி காயவைக்க இடமில்லாததால் சாலைகளில் கொட்டி காய வைக்கின்றனர். இதனால், அச்சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலையிலேயே விவசாயிகள் கேழ்வரகை ஜலித்தும், தூற்றியும் சுத்தம் செய்வதால் தூசி மண்டலம் போல் காட்சி அளிக்கிறது. இதனால், அவ்வப்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, செய்யூர் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப நெல், கேழ்வரகு களங்கள் அமைத்து கொடுத்து வாகன ஓட்டிகளை விபத்துகளில் இருந்து காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: