கொச்சி விமான நிலையத்தில் கொள்ளை விலை டீ, காபி விலையை குறைத்தார் பிரதமர்: கேரள வக்கீல் புகார் மீது நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் ஷாஜி. வக்கீலான இவர், கடந்த மார்ச்சில் டெல்லி செல்வதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் டீ சாப்பிட விரும்பிய ஷாஜி, அதற்கான விலையைக் கேட்டு அதிர்ந்தார். ஒரு கடையில் டீயின் விலை ரூ.150 என கூறியதால், அதிர்ச்சியுடன் அடுத்த கடைக்கு சென்றார். அங்கும் டீக்கு அதே விலைதான். இதனால், பால் சேர்க்காத ஒரு பிளாக் டீ குடிக்கலாம் என்று கருதி அதற்கான விலையை கேட்டபோது, அதன் விலையும் ரூ.150 என கடைக்காரர் கூறினார். வெறுத்துப்போன ஷாஜி, டீ குடிக்கும் எண்ணத்தை விட்டு டெல்லிக்கு சென்றார்.

 பின்னர், ஊருக்கு திரும்பியதும் இது குறித்து பிரதமர் மோடிக்கும், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்கும் பதிவு தபாலில் புகார் அனுப்பினார்.ஒரு வாரத்திற்கு பிறகு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஷாஜிக்கு வந்த பதிலில், ‘கொச்சி விமான நிலையத்தில் கொள்ளை விலைக்கு டீ, காபி விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கொச்சி விமான நிலைய இயக்குனரிடம் இருந்து ஷாஜிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘கொச்சி விமான  நிலையத்தில் டீ காபி மற்றும் ஸ்நாக்ஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீ விலை ரூ.15. காபி ரூ.20. ஸ்நாக்ஸ் ரூ.15க்கும் விற்கப்படும். பிரதமர் மோடியின் நேரடி தலையீட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: