பொள்ளாச்சி முகாமில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை வனப்பகுதியில் விடுவிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வரகளியாறு முகாமில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை, பாகன்களின் பயிற்சிக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காட்டு யானை ஒன்று, அங்கிருந்து இடம்பெயர்ந்து அர்த்தனாரிபாளையம், ஆண்டியூர் கிராம பகுதியில் நுழைந்தது. அந்த யானை அப்பகுதியில் தினமும் தோட்டத்து வீடுகளை சேதப்படுத்தியது. நவமலை, சேத்துமடை, அர்த்தனாரிபாளையம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 4 பேரை கொன்றது. பொதுமக்கள் போராட்டம் மற்றும் புகாரையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி இரவு அரிசி ராஜா என்று அழைக்கப்பட்ட இந்த காட்டு யானையை ஆண்டியூரில் உள்ள ஒரு தோட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

அந்த யானையை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைத்தனர். யானை அடைக்கப்பட்ட மரக்கூண்டு அருகே 5 கும்கிகள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டன. தொடர்ந்து பாகன்கள் அளித்த பயிற்சிக்கு பின் அரிசி ராஜா யானை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மரக்கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை 260 நாட்களுக்கு பிறகு, பாகன்கள் உதவியுடன் தற்போது, வெளியே கொண்டு வரப்பட்டு, வரகளியாறு வனத்தில் நடமாட விடப்பட்டது. இதை வன ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

Related Stories: