10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆடியில் நீர்வரத்து; கோமுகி அணையின் நீர்மட்டம் 35 அடியாக உயர்வு

சின்னசேலம்: கோமுகி அணையின் நீர்மட்டம் கடந்த 10 ஆண்டுகளில் ஆடி மாதத்தில் முதன் முறையாக நீர்வரத்து துவங்கி 35அடியாக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன்மலையில் இருந்து கோமுகி ஆறு உற்பத்தியாகிறது. மலையடிவாரத்தில் கோமுகி அணைக்கட்டு உள்ளது. கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுத்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளது.

கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு  சென்று அதன்மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின்மூலம் மன்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார்  5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணை பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் திறக்கப்படும். இந்நிலையில் கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வருவதால்  பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து உள்ளது.

அதைப்போல கல்வராயன்மலையில் இருந்து கல்பொடை, பொட்டியம், மாயம்பாடி ஆறுகளில் இருந்து கோமுகி அணைக்கு சுமார் 200 கனஅடி நீர்வரத்து  உள்ளது. கோமுகி அணையின் மொத்த நீர் மட்டம் 46 ஆடியாகும். தற்போது நீர்மட்டம் 27 அடியிலிருந்து 35 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆடி மாதத்தில் கோமுகி அணைக்கு நீர்வரத்து உள்ளது இதுவே முதல் முறையாகும். கோமுகி அணை முன்கூட்டியே நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: