பாடியில் நள்ளிரவில் கம்பெனி ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.20 ஆயிரம் பணம் பறிப்பு: வாலிபர்களுக்கு வலை

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே பாடியில் நள்ளிரவில் வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த கம்பெனி ஊழியரை சரமாரியாக வெட்டி ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்த 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூரை அடுத்த பாடி சீனிவாசநகர், 10வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (50).  இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெங்கட்ராமன் பைக்கில் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அங்கு, அவர் சக ஊழியர் ஒருவரிடம் வீட்டு வாடகை கொடுப்பதற்காக ரூ.20ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர், அவர்  நள்ளிரவு 2.30 மணியளவில் வேலை முடிந்து கம்பெனியில் இருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர், பாடி, சி.டி.எச் சாலை, பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவரது பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதனை அடுத்து, வெங்கட்ராமன் பைக்கை உருட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து திடீரென்று அவர்கள் பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

பின்னர் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். பின்னர், அவர்கள் மூவரும் அங்கிருந்து பைக்கில் தப்பி தலைமறைவானார். படுகாயமடைந்த வெங்கட்ராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கொரட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை தேடி வருகின்றனர். கம்பெனி ஊழியரை சரமாரி வெட்டி பணம் பறித்த சம்பவம் பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: