வருவாய் இல்லாததால் சேமிப்பு உண்டியலை உடைத்து மின் கட்டண தொகை 11,750 ரூபாயை சில்லறையாக செலுத்திய கடைக்காரர்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை சன்னதி தெருவில் ஜூஸ் கடை வைத்திருப்பவர் கார்த்திக் (34). இவரது கடைக்கான இந்த மாத மின் கட்டணம் ரூ.11,750 என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை செலுத்த பணமின்றி தவித்தார். கட்டணம் செலுத்த நேற்று கடைசி நாள் என்பதால், வேறு வழியின்றி குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.10,000 மதிப்புள்ள நாணயங்களை மின்வாரிய அலுவலக கவுன்டரில் செலுத்த முயன்ற போது, இவ்வளவு சில்லறைகளை பெற முடியாது என பணம் வசூலிப்பாளர் மறுத்து விட்டார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், இருவரையும் சமாதானம் செய்தார். பின்னர் வேறு வழியின்றி மின் கட்டண தொகையாக நாணயங்களை பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: