ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுமா? : அயோத்தி மதகுரு ஒருவருக்கும், விழா பாதுகாப்பு காவலர்கள் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி!!

லக்னோ: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 200 முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த 16 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ராமர் கோயிலின் தலைமை மதகுருவின் உதவியாளரான பிரதீப் தாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அதே சமயம் தலைமை மதகுரு சத்யேந்திர தாஸ் மற்றும் பிற 4 உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மதகுருக்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 12 பேருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

கடந்த சனிக்கிழமை உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் அடிக்கல் நாட்டு நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்கு ராம் ஜன்மபூமி வளாகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அன்றைய தினம் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மதுகுரு பிரதீப் தாஸ், முதல்வர் யோகி ஆதித்யநாத் அருகில் இருந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே எவ்வாறாயினும்  அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தற்போது 29,997 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 375 பேர் அயோத்தியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: