சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது: தோட்டத்தில் பதுங்கி இருந்தவர் சிக்கினார்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் நேற்று கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த வாரம், 15 வயது சிறுமி (10ம் வகுப்பு மாணவி) மாயம் ஆனார். தனது மகளை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். புகாரின்பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்து மாணவியையும், வாலிபரையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவி, அளித்த வாக்கு மூலத்தில் தனது தாயார் தன்னை தவறான வழியில் ஈடுபடுத்துவதாகவும், கடந்த 2017 முதல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினார்.

இதையடுத்து, நாஞ்சில் முருகேசன் மற்றும் மேலும் 3 பேர், மாணவியின் தாயார் என மொத்தம் 5 பேர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், 3 நாளாக நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகிவிட்டார். இதனால், 5 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு தோட்டத்தில் நாஞ்சில் முருகேசன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு நேற்று தகவல் வந்தது. இதன்பின், தனிப்படை போலீசார் சென்று, நாஞ்சில் முருகேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏற்கனவே சிறுமியின் தாயார் மற்றும் அவரை பாலியல் வன்கொடுமை செய்த இடலாக்குடியை பால் (66), அசோக்குமார் (43), கார்த்திக் (28) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிறுமியின் தாயார் தக்கலை பெண்கள் சிறையிலும், மற்ற 3 பேர், நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

* தாயாரின் பண ஆசை

முன்னதாக சிறுமி அளித்த வாக்குமூலத்தில், ‘தாயார், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். அந்த வகையில்தான், நாஞ்சில் முருகேசனின் தொடர்பு கிடைத்தது. கடந்த 2017-ல் தீபாவளி சமயத்தில், நாஞ்சில் முருகேசனிடம் அழைத்து சென்றார். அப்போதுதான் அவர் என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். அவருடன் பலரும் பலாத்காரம் செய்தனர்’ என்று கூறியிருந்தார். எனவே, சிறுமியை விசாரித்தால் மேலும் பலர் சிக்க கூடும் என கூறப்படுகிறது.

Related Stories: