3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு யோகா, உடற்பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி: பள்ளி, கல்லூரி, தியேட்டர்களுக்கு தடை நீட்டிப்பு; இரவுநேர கட்டுப்பாடுகள் நீக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதற்குமான 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் யோகா, உடற்பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மதுபான விடுதிகளுக்கான தடை நீடிக்கிறது. இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பொருளாதார மந்தநிலை, மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசு இதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போது நாள் தோறும் 50,000 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக பரவி வரும் நிலையில், 3ம் கட்ட ஊரடங்கிற்கான தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் பரிந்துரைப்படி, மத்திய அரசு கீழ்வரும் தளர்வுகளை அறிவித்துள்ளது.

* நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

* யோகா மற்றும் உடற்பயிற்சி மையங்கள் ஆகியவை வரும் 5ம் தேதி முதல் செயல்படலாம். இதற்கான வழிகாட்டுதல் முறைகளை உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும்.

* முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்படலாம்.

* வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விமான சேவை தொடர்ந்து நடைபெறும். அப்போதைய தேவையை பொருத்து மேலும் சில விமானங்கள் இயக்கப்படும்.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் வழங்கப்பட வேண்டிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வரும் 31ம் தேதி வரை எந்த தளர்வுகளும் கிடையாது.

* பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை செயல்பட அனுமதி கிடையாது. இது தொடர்பான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.

* கடைகள் சமூக இடைவெளி உட்பட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்

* திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகள், உள் அரங்கங்கள் ஆகியவற்றுக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் சேவை மீதான தடையும் தளர்வின்றி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

* திருமணங்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுது போக்குகள், கல்வி மற்றும் கலசாரா நிகழ்வுகள், மத வழிபாடுகள் உள்ளிட்ட பெரிய சமூக கூடுதல்களுக்கான தடைகள் தொடர்ந்து அமலில் உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* இ-பாஸ் தேவையில்லை

மாநிலத்திற்குள்ளும், மாநிலத்திற்கு வெளியிலும் செல்வதற்கு சிறப்பு அனுமதிகள், இ-பாஸ் போன்றவை பெற வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு நேற்று தளர்வு அறிவித்துள்ளது. இனி பொதுமக்கள் எந்த தடையுமின்றி பிற மாநிலங்களுக்கு சென்று வரலாம். அதே போல சரக்குகளையும் தடையின்றி அனுப்பி வைக்க முடியும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் இந்த தளர்வு பொருந்தாது.

Related Stories: