கேரள வரலாற்றில் முதல்முறையாக இறந்தவர் உடலை கல்லறை தோட்டத்தில் எரிக்க அனுமதி: கொரோனா தொற்றால் நடவடிக்கை

திருவனந்தபுரம்: கொரோனா பாதித்து இறந்தால் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் கூட உடலை பார்க்கவோ, தொடவோ முடியாது. உடலில் உள்ள வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதால், கொரோனா பாதித்து  இறந்தவர் உடல் பிளாஸ்டிக்கால்  மூடி 12 அடி ஆழத்தில் புதைக்கப்படுகிறது. உடலை புதைக்கும் போது கூட உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. சுகாதாரத் துறை ஊழியர்கள் தகுந்த கவச உடை அணிந்து உடலை புதைப்பார்கள். கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை புதைப்பதைவிட எரியூட்டுவதுதான் நல்லது என பல்வேறு சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், கிறிஸ்தவ மற்றும்  முஸ்லிம் சமுதாயத்தில் தற்போது கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களும் கூட, அவர்களின் மத வழக்கப்படி புதைக்கப்பட்டே வருகின்றன.

இந்நிலையில், ஆலப்புழா கத்தோலிக்க சபை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தங்கள் சபையை சேர்ந்தவர்கள்கொரோனா பாதிப்பால் இறந்தால், அவர்களின் உடல்களை கல்லறை தோட்டங்களில் எரியூட்ட அனுமதி அளித்துள்ளது. பின்னர், அந்த அஸ்தியை புதைத்து கல்லறை கட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆலப்புழா அருகே காட்டூரை சேர்ந்த 85 வயது மூதாட்டியும், மாராரிக்குளம் பகுதியை சேர்ந்த 62 வயது மூதாட்டியும் கொரோனா பாதித்து இறந்தனர். அவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் காட்டூர், மாராரிக்குளம் கல்லறை தோட்டங்களில், சபைக்கு உட்பட்ட பாதிரியார்களின் பிரார்த்தனைகளுடன் எரியூட்டப்பட்டன. கேரள மாநில வரலாற்றில், கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உடல்கள் எரியூட்டப்படுவது இதுவே முதல்முறை. ஆலப்புழா கத்தோலிக்க சபையின் இந்த முடிவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

Related Stories: