கொரோனா, EIA 2020 குறித்து முக்கிய ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்...!!!

புதுடெல்லி: கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொடூர கொரோனா வைரசால், உலகளவில் இதுவரை 1.68 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.62 லட்சம் பேர் வரை இறந்துள்ளனர். அதே போல், இந்தியாவிலும் 15.32  லட்சம் பேர் பாதித்தும், 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். இதற்கிடையே, கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வரவும்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இருப்பினும், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு நாளை மறுநாள்  ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கு ஏற்றவாறு ஊரடங்கை நீட்டித்து வருகின்றனர். கொரோனா ஒரு பக்கம் இருக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள  சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையால் (இ.ஐ.ஏ 2020-ஐ) தமிழகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. டெல்லி 7, லோக் கல்யாண் மார்க் பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக்  கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பதா? தளர்த்துவதா என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதனைபோல், EIA 2020 குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரம் குறித்தும், மருத்துவக் படிப்பில்  OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேதுறை அமைச்சர் பியுஷ் கோயல், மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போக்ரியால், சுற்றுச்சூழல் துறை பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories: