உரிமைகளை பறிக்க நினைக்கும் பாசிச அரசுகளை எதிர்த்து ஸ்டாலின்களே போராடுகிறார்கள்: திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ அறிக்கை

காஞ்சிபுரம்: உரிமைகளை பறிக்க நினைக்கும் பாசிச அரசுகளை எதிர்த்து ஸ்டாலின்களே போராடுகிறார்கள் என திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் அறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து இடஒதுக்கீடு உரிமையை  கடந்த 4 ஆண்டுகளாக பறித்து தமிழக மாணவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்து வந்தது மத்திய பாஜ அரசு. அப்போதும் வெட்கமில்லாமல் கூட்டணியில் இருந்து கொண்டு தலையாட்டி கொண்டிருந்தது மாநில அதிமுக அரசு.

 கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற தமிழக மாணவர்களுக்கு நான் இருக்கிறேன் என கை நீட்டி உதவினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பாசிசம் எப்போதெல்லாம் உரிமைகளை பறிக்க நினைக்கிறதோ அப்போதெல்லாம் ஸ்டாலின்களே பாசிசத்தை எதிர்த்து போராடுகிறார்கள். அது ஹிட்லர் பாசிசமாக இருந்தாலும் சரி, இந்திய பாசிசமாக இருந்தாலும் சரி. பாசிசத்தை எதிர்க்கவல்ல ஆற்றல் உள்ளவர்கள் ஸ்டாலின்களே. அதை நிரூபிக்கும் வண்ணம் பாசிசம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து இடஒதுக்கீடு உரிமையை பாசிச பாஜ பறிக்க நினைத்தபோது உயர்நீதிமன்றத்தில் போராடி இட ஒதுக்கீடு உரிமையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர்ஜிதம் செய்தார்.

3 மாதங்களுக்குள் இதற்கான கமிட்டியை அமைக்க சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு உரிமையை பறிக்க நினைத்த பாஜவே, இப்போது இட ஒதுக்கீடு உரிமைக்காக போராடுவதுபோல் நாடகமாடுகிறது. பாஜவிடம் திமுக மாணவர் அணி கேட்க விரும்புவது ஒன்றுதான். இந்த வழக்கில் மத்திய அரசின் இந்திய மருத்துவ கழகம் மேல்முறையீடுக்கு போகாது என்பதை உறுதிபடுத்த முடியுமா? அப்படி மத்திய அரசு மேல்முறையீடுக்கு போனால் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுமா? இதை செய்யும் தைரியம் பாஜவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கிறதா? பாஜக மேல்முறையீடு செய்யும், என்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றே கேவியட் மனு தாக்கல் செய்து விட்டார். தமிழக மாணவர்களின் சமூகநீதியையும் எதிர்காலத்தையும் காத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மாணவர்கள் சார்பாக திமுக மாணவர் அணி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: