பிஞ்சு உயிர்களோடு விளையாடும் கொரோனா பட்டினியால் மாதம் 10,000 குழந்தைகள் பலி: தலைமுறை பேரழிவாக மாறுகிறது ஊட்டசத்து குறைபாடு

ஏற்கனவே, பசியும் பட்டினியும் நிறைந்த இந்த உலகில், கொரோனாவின் தாக்குதல் அதை மேலும் பல மடங்கு அதிகமாக்கி இருப்பதாக, ஐநா.வின் 4 முக்கிய அமைப்புகள் கவலையுடன் தெரிவித்துள்ளன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்  குழந்தைகள், சிறுவர்கள்தான். ஒட்டிய வயிறு, குச்சிப் போல் மெலிந்த கை, கால்கள். குழிக்குள் புதைந்த கண்கள் என பல கோடி குழந்தைகளும், சிறுவர்களும் போதிய உணவின்றி, ஊட்டச் சத்து இன்றி உலகில் தினம் தினம் செத்து பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐநா. அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் சில வருமாறு:

1 கொரோனாவால் பெருகி வரும் பட்டினி, 30 சதவிகித மக்களை பாதித்துள்ளது.

2 ‘கொரோனா வைரசும், அதனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களும் பட்டினி நிறைந்த சமூகத்தை உண்டாக்கி இருக்கிறது. அதன் காரணமாக, தற்போது மாதத்துக்கு 10 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றன. 3ஊட்டச்சத்து பற்றாக்குறை என்பது நீண்ட நாள் பிரச்னையாக உள்ளது. இது ஒரு தனிமனித பிரச்னை என்பதிலிருந்து மாறி, ஒரு தலைமுறையின் பேரழிவாகத் தற்போது உருவெடுத்துள்ளது.

4 சர்வதேச அளவில் பெருகி வரும் பட்டினியைக் குறைக்க, உடனடியாக ரூ.17, 760 கோடி செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

5 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீர்குலைந்துள்ளன. ஊட்டச்சத்து வழங்கும் உணவுத் திட்டம் செயலிழந்துள்ளது. இதன்மூலம். உலகளவில் மிகப்பெரிய தீமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

6 ஆப்கானிஸ்தானில் இந்த ஒரு ஆண்டில் மட்டுமே, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை 10 மடங்காக அதிகரித்துள்ளது. பட்டினியின் சிவப்பு மண்டலமாக மாறியுள்ள இந்நாட்டில், இதன் காரணமாக 5ல் ஒரு இளம் குழந்தை உயிரிழந்துள்ளனர்.

7 பட்டினியால் மிகுதியாக வாடும் ஆப்ரிக்காவின் சூடான் பகுதியில் 9.6 லட்சம் மக்கள் ஒருவேளை உணவுடன் மட்டுமே நாளை கடத்துகின்றனர். இந்த பட்டினி விகிதம் இந்த ஆண்டில் மட்டுமே 65 சதவிகிதமாக விஸ்வரூபம் எடுத்திருப்பது வேதனைக்குரியது.

8 கொரோனா பரவல், ஊரடங்குக்குப் பின் மூன்று வேளை உணவு என்றிருந்த பல நாடுகளிலும் தற்போது இதுதான் பொதுவான நிலைமையாகவும் இருக்கிறது. - இவ்வாறு ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

* இரட்டை குழந்தைகளின் பலி; பட்டினியின் கொடூர உச்சம்

பட்டினியின் கொடூரம் பற்றி வெனிசுலாவில் மருத்துவராகப் பணிபுரிந்து வரும் பிரான்சிஸ்கோ நியேட்டோ கூறுகையில், ‘‘கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய 2 மாதங்களுக்குப் பிறகு, 18 மாதமேயான இரட்டைக் குழந்தைகளின் இறந்த உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன. காரணத்தைக் கண்டறிய முயன்ற போதுதான் வலிமிகுந்த உண்மை தெரிய வந்தது. அந்த குழந்தைகளின் தாயார் வேலை இல்லாதவர். தன் வயதான தாயாரோடு வசித்து வந்தார். குழந்தைகளுக்குப் பால், உணவு வழங்க இயலாத வறுமையால், வாழைப்பழத்தை வெந்நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கி வந்துள்ளார். இதுவே அக்குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக ஆகிவிட்டது,’’ என்றார்.

Related Stories: