நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது தான் சரியான முடிவா? : பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

சென்னை : நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. ஆயினும் கொரோனாவுக்கு எதிராக

மத்திய அரசு பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி, தான் நிகழ்த்தி வரும் உரைகளில், நாட்டில் கொரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததன் விளைவாகவே நாட்டில் பாதிப்பு குறைவாக உள்ளதாக குறிப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததாகக் கூறிய பிரதமர் மோடிக்கு ப. சிதம்பரம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது?.நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா?.ரயில் இன்றி, பஸ் இன்றி பல இலட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே - சரியான முடிவின் விளைவா? பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா?ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - சரியான முடிவுகளின் பயனா?, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: