தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் அவகாசம் நீட்டிப்பு: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

புதுடெல்லி: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் நடைமுறையை செயல்படுத்துவது அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். தங்க நகைகள் பெரும்பாலும் ஹால்மார்க் முத்திரையுடன்தான் விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமான நகைக்கடைகள் ஹால்மார்க்கில் பதிவு செய்துள்ளன. இருப்பினும் ஹால்மார்க் கட்டாயம் நடைமுறை தற்போது இல்லை. ஆனால், தங்கத்தின் தரத்தை உறுதி செய்யும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கி மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி கட்டாய ஹால்மார்க் நடைமுறை 2021 ஜனவரி 15ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும், மீறினால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று அளித்த பேட்டியில் ‘‘கொரோனா பரவல் காரணமாக, நகை வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று, கட்டாய ஹால்மார்க் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 15ல் இருந்து அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை பதித்த 14, 18 மற்றும் 22 காரட் நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: