இன்று 21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம்: தேசத்தை பாதுகாத்த ஆயுதப்படைகளின் தைரியத்தை நினைவில் கொள்வோம்...பிரதமர் மோடி டுவிட்...!!!!

டெல்லி: 1999-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்தது. பாகிஸ்தான்  இராணுவமும், காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும். போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள்  மீது சுமத்தியது.

ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான்  துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட  இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.

இதற்கிடையே, கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வகையில்,  இன்று 21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்  துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், 21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கார்கில் விஜய் திவாஸில், 1999-ல் நம் தேசத்தை உறுதியுடன் பாதுகாத்த நமது ஆயுதப்படைகளின்  தைரியத்தையும் உறுதியையும் நினைவில் கொள்கிறோம். அவர்களின் வீரம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியின் போது இதைப் பற்றி மேலும் பேசுவோம், இது விரைவில் தொடங்குகிறது.

என்று பதிவிட்டுள்ளார். மேலும், #CourageInKargil என்ற ஹெஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார்.

மேலும், கார்கில் போர் குறித்த இந்திய ராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தை குறிப்பிட்டு, நமது வீரர்களின் துணிச்சலுக்காக இந்தியா நித்தியமாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: