கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு அறுவை சிகிச்சை செய்வது ஆபத்து: சாதாரண நபர்களை போல கையாள முடியாது

* எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் எச்சரிக்கை

* கொரோனா பாசிட்டிவ் வந்தவர்கள் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வது தற்போதைய சூழலில் சரியாக இருக்காது

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்பட எலும்பு தொடர்பான எந்த அறுவை சிகிச்சையும் செய்யக் கூடாது. இது மேலும் நோயாளிகளை ஆபத்தில் தள்ளிவிடும் என்று எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் உமர் செரீப் கூறியுள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். எனவே, விட்டமின் டி, கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாலையில் சூரிய ஒளியில் நிற்பதன் மூலம் விட்டமின் டி உடலுக்கு கிடைக்கும். அதேபோல பனீர், பால் வகைகள், சோயாபீன்ஸ், கீரை வகைகள், மீன்கள், முட்ைட வெள்ளைக்கரு போன்றவற்றை உட்ககொள்வதின் மூலம் நம்முடைய உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு 45 நிமிடம் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வலிமை கொடுக்கும். மேலும் உடற்பயிற்சிகள் எலும்பு, இதயம், நுரையீரல் போன்றவை ஆரோக்கியமாக இருக்க செய்யும். இதன் மூலம் எலும்புகள் உறுதியாகும்போது மூட்டு வலிகள் போன்ற மற்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். சத்துள்ள உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இருந்தாலே  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தானாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 கொரோனா நோயினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அதிகமாக மூட்டுவலி, உடல் வலி ஏற்படும், உடல் சோர்வாகவும், தெம்பு இல்லாததைப் போன்று இருக்கும். இதை தவிர்க்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து குணமான பிறகும் தொடர்ந்து 3 வாரங்கள் உடல் வலி இருக்கும்.

எனவே அதுவரைக்கும் சத்தான உணவுகள், உடற்பயிற்சி போன்றவை தொடர வேண்டும். வயதானவர்களுக்கு ஏற்கனவே கால்சியம், விட்டமின் டி குறைவாகவே இருக்கும். வயது மூப்பு காரணமாக எலும்பு தேய்மானம், வீக்கம் இருக்கும். அதனால் மற்றவர்களை விட வயதானவர்கள் கொரோனா தாக்காத படி அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் மூட்டுவலி அதிகம் இருக்கும். அதனால் இயல்பான நடை, படிக்கட்டு ஏறுவது மிகவும் சிரமம். வயதானவர்களின் உணவில் பால் ஒரு அங்கமாக மாறி இருக்க வேண்டும். கால்சியம் 500 முதல் 1000 கிராம் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். விட்டமின் டி3  ஒரு வாரத்திற்கு 6 லட்சம் யூனிட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியமானவர்களுக்கு கொரோனா வந்தால் அவர்களை தனிமைப்படுத்தினாலே போதும். நுரையீரல் பாதிப்பு, உடல் பருமனானவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கிட்னி பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு தன்மை இல்லாதவர்களை தான் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்கனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இணைநோய்கள் உள்ள குழந்தைகளுக்குத் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும்.

கொரோனா பாசிட்டிவ் வந்தவர்கள் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வது தற்போதைய சூழலில் சரியாக இருக்காது. குணமாகி 2 அல்லது 3 வாரம் கழித்து அதன்பிறகு ஆப்ரேஷன் செய்வது நல்லது. ஏனென்றால் கொரோனா நோயாளிகளுக்கு எலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை செய்வதால் சீழ் பிடிக்கும், தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.    இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: