போலி முகவரியால் சிக்கல்: கொரோனா நோயாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுமா?

புதுச்சேரி: புதுவையில் போலி முகவரி அளித்து கொரோனா நோயாளிகள் தப்பி வருவது பொதுமக்களை கவலையடைய செய்துள்ளது. எனவே இந்நோய்க்கான பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதுவையில் கொரோனா நோய் பாதிப்பு 2,500ஐ கடந்துள்ளது. இருப்பினும் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களும், தொற்று பாதித்தவர்களின் குடும்பத்தினரும் சகஜமாக வெளியே நடமாடுகின்றனர். நோய் எண்ணிக்கை தான் அதிகமாகி வருகிறதே தவிர, அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கை சுகாதாரத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு வந்தவர்கள் கூறும் போலி முகவரியால் புதிய சிக்கல் எழுகிறது.

சுகாதாரத்துறை கேட்கும் விபரங்களில் சில போலியாக கொடுக்கப்படுகிறது. அதிலும் முகவரி, செல்போன் நம்பர் மாற்றி கொடுக்கப்படுவதால், ஆய்வக முடிவில் அந்த நபருக்கு தொற்று உறுதியானால் அவரை கோவிட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வர முடியாத நிலை உள்ளது. பாஸ்கர் என்ற பெயரில் தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் என்ற போலி முகவரி கொடுத்து ஒருவர் தப்பினார். நேற்று கதிர்காமத்தில் அருண் என்ற பெயரில் போலியான முகவரி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி அலைந்தும், போலி முகவரி காரணமாக அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

அதேவேளையில் தலைமறைவாக உள்ள இவர்களால் கொரோனோ மேலும் பரவும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற சூழலை கருத்தில் கொண்டுள்ள சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களிடம் ஆதாரை கட்டாயமாக்க வேண்டும், செல்போன் நம்பரை பெறும்போது அவை பயன்பாட்டில் உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். சரியான தகவல்களை பொதுமக்கள் அளித்துள்ளார்களா? என்பதை உறுதி செய்து பரிசோதித்தால்தான் பாதிப்பு கண்டறியும் நபர்கள் தப்பாமல் பாதுகாக்க முடியும். இல்லாவிடில் இனிவரும் காலங்களில் சுகாதாரத்துறையின் செயல்பாட்டில் சந்தேகம் வலுக்கும் நிலை உருவாகும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: