தமிழகத்தில் 1,43,297 பேர் பூரண குணம்: சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 26%ஆக குறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் கடந்த மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. தற்போது ஜூலை மாதத்தில் அவற்றின் வீரியம் குறைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதாவது ஜூலை 1ல் 42 சதவீதமாக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 26 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக சுமார் 750 படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையில் மேலும் புதிதாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், இதுவரை தமிழகத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297 பேர் கொரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்த 2176 கர்ப்பிணி பெண்களில் சுமார் 1515 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எங்கெல்லாம் சிடி ஸ்கேன் வசதி அதிகளவில் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் போதுமான அளவு சிடி ஸ்கேனானது பொருத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.  இவ்வாறு, அரசு பல்வேறு கொரோனா தடுப்பு வழிமுறைகளை செய்து வருகிறது. அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் நுகர்வு தன்மை இல்லாதது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டால்தான், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் சார்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அந்த வகையில்தான் தொடர்ந்து கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் நோயாளிகளை விரைவில் கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க அரசு, தொடர்ந்து போராடி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: