கொரோனாவை ஒழிக்கும் சக்தி கொண்டது ‘பாபிஜி அப்பளம்’ :மத்திய அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் மக்கள் கொதிப்பு!!!

ஜெய்ப்பூர்: ‘பாபிஜி அப்பளம்’ என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த அப்பளம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து அறிவியலுக்கு முரணான மற்றும் போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், அமைச்சர் அர்ஜுன் மேக்வால் அவர்களின் பேச்சு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சராக உள்ள அர்ஜுன் ராம் மேக்வால், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்துள்ள பாபிஜி பப்பட் என்னும் அப்பளம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியில் பாபிஜி என்றால் அண்ணி மற்றும் பப்பட் என்றால் அப்பளம் என்பது பொருளாகும்.

இதையடுத்து பாபிஜி அப்பளத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் வகையிலான வீடியோவில் பேசிய அர்ஜுன் ராம் மேக்வால், “ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், ஒரு உற்பத்தியாளர் பாபிஜி அப்பளம் என்ற பெயரில் அப்பள நிறுவனம் தொடங்கியுள்ளார். இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க அரசுகளும், விஞ்ஞானிகளும் கடுமையாகப் போராடி வரும் நிலையில், அவற்றை அலட்சியப்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் பா.ஜ.க அமைச்சர் பேசியிருப்பதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: