கொரோனா தடுப்பூசியை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும்: உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,92,915-லிருந்து 12,38,635-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,732-லிருந்து 29,861 -ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,53,050-லிருந்து 7,82,607 ஆக அதிகரித்துள்ளது.

உலகச் சுகாதார அமைப்பின் அவசர காலத் திட்டத்தின் தலைவர் மைக் ரியான் கூறுகையில், நோய்த்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவற்றின் பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் என்றார். மேலும் பொருளாதாரத்தைச் சார்ந்து இல்லாமல் தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.53 கோடியை கடந்துள்ளது. உலகம் முழுவதும் நோய் பாதிப்பால் ஒரே நாளில் 7,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 1,46,0000 எட்டியுள்ளது. அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்ட 71,000 பேர் உட்பட 41,00,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பிரேசிலில் 22,31,000 பேர், ரஷ்யாவில் 7,89,000 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.தென்னாப்பிரிக்காவில் புதிதாக 13,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,94,000ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் உலகம் முழுவதும் இதுவரை 93,43,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

Related Stories: