மலை போல் குவியும் கொரோனா மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் சிக்கல் : மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரபரப்பு அறிக்கை

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சையின் போது, கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மலை போல் குவிந்து வருவது டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய சவாலாக எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு 2,907 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள் 20 ஆயிரத்து 707 தனிமை மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். மேலும், நோயாளிகளிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகளை சேகரிக்க, 1,539 மையங்கள் செயல்படுகின்றன. இதுதவிர, நாடு முழுவதும் பல நூறு மருத்துவ ஆய்வகங்கள் செயல்படுகின்றன.

இவற்றின் மூலம்  கொரோனா மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. மாஸ்க்குகள், துணிகள், தனிநபர் பாதுகாப்பு உடைகள், பஞ்சுகள், மருந்து உறைகள், ஆய்வு உபகரணங்கள், நோயாளிகள் சாப்பிட பயன்படுத்தும் பொருட்களின் மிச்சம் என பல்வேறு பொருட்கள் இதில் அடங்கும். இவை மற்ற மருத்துவக் கழிவுகளுடன் சேர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதால், நோய் மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கொரோனா மருத்துவக் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து பாதுகாப்பான  முறையில் அழிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

 இதனிடையே கொரோனா மருத்துவ கழிவுகள் மலை போல் குவிந்து வருவதால் அவற்றை அகற்றுவது புதிய சவாலாக உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. கொரோனா சிகிச்சையால் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 101 மெட்ரிக் டன் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. இது தவிர இந்தியாவில் தினமும் 609 மெட்ரிக் டன் சாதாரண மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 840 மெட்ரிக் டன் மருத்துவ கழிவுகளை எரிக்கும் திறனுள்ள எரிகலன் வசதி உள்ளது. இவற்றில் 55% எரிக்கலன்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் நாள் ஒன்றுக்கு 710 மெட்ரிக் டன் மருத்துவ கழிவுகள் சேர்கிறது. இதனால் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த சில இடங்களில் ஆழக் குழிதோண்டி புதைக்கும் முறை பின்பற்றப்படுகிறது. திரிபுரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இந்த முறையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படுகின்றன. 

Related Stories: