கொலை வழக்கு விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு சாத்தான்குளம் போலீசாருக்கு எதிரான மற்றொரு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: கொலை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால் மரணமடைந்தார் என கூறப்படும் வழக்கையும், சிபிசிஐடிக்கு மாற்ற உள்ளதாக அரசுத் தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த வடிவு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மூத்த மகன் துரையை ஒரு கொலை வழக்கு விசாரணைக்காக தேடி வந்து, அவருக்கு பதிலாக 2வது மகன் மகேந்திரனை இழுத்து சென்றுள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர், மகேந்திரனை தலை, உடல் முழுவதும் பலமாக தாக்கியுள்ளனர். மே 24ம் தேதி இரவு மகேந்திரன் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, போலீசார், உயரதிகாரிகளிடம் எவ்வித புகாரும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர். போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.  

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜூன் 13ல் மகேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. சட்டவிரோதமாக என் மகனை காவல்நிலையம் அழைத்துச் சென்று தலை மற்றும் உடலில் தாக்கிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகு கணேஷ் ஆகியோர் மீது சாத்தான்குளம் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் நேற்று விசாரித்தார்.  அரசு வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி, ‘‘மனுதாரர் குறிப்பிடும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்ய உள்ளனர். இதுதொடர்பாக டிஜிபியின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: