சிறுத்தையை பிடிக்க கூண்டுக்குள் அமர்ந்து கிணற்றில் இறங்கிய அதிகாரி: நாகராஹோல் வனப்பகுதியில் நெகிழ்ச்சி

மைசூரு:  நாகராஹோல் வனப்பகுதி கிராம மக்கள் கூறியதால் சிறுத்தையை பிடிக்க கூண்டுக்குள் அமர்ந்து கிணற்றில் இறங்கிய அதிகாரியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆபத்தான நிலையில் இருக்கும் காட்டு விலங்குகளையும், பறவைகளையும் மீட்கும் போது, ​சிலர் துணிச்சலான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுவது பாராட்டை பெறுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மைசூரு அடுத்த, நாகராஹோலில் உள்ள ஒரு கிணற்றில் சிறுத்தை விழுந்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறுத்தையை மீட்க வனத்துறை குழு களம் இறங்கியது.

சித்தராஜூ என்ற துணிச்சலான வன அதிகாரி, 6 அடி சுற்றளவு கொண்ட ஒரு உலோக கூண்டில் தன்னை தானே அடைத்துக் கொண்டார். பின்னர், வனத்துறையினர் துணையுடன் 100 அடி ஆழ கிணற்றில் சித்தராஜூவை இறக்கிவிட்டனர். பாதுகாப்பிற்காக கூண்டில் இருந்த சித்தராஜூ, அவர் கையில் ஒரு டார்ச் மற்றும் மொபைல் போன் மட்டுமே வைத்திருந்தார். ஆனால், கிணற்றுக்குள் சிறுத்தை எதுவும் காணப்படவில்லை. சில மணி நேரம் கிணற்றுக்குள் சிறுத்தையை தேடிய சித்தராஜூ, மொபைல் போன் மூலம் மேலே நின்றிருந்த உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்தார்.

அதையடுத்து, அவர் மீண்டும் கூண்டுடன் மேலே கொண்டு வரப்பட்டார். இதுகுறித்து, நாகராஹோல் புலிகள் வனப்பகுதி இயக்குநர் மகேஷ் குமார் கூறுகையில், ‘கராபுரா கிராம மக்கள் கிணற்றின் உள்ளே சிறுத்தை உள்ளதாக தெரிவித்தனர். கயிற்றைப் பயன்படுத்தி ஒரு டார்ச்சுடன், ஒரு கேமராவை இணைத்து சிறுத்தையை தேடினோம். ஆனால், சிறுத்தையை பார்க்க முடியவில்லை. அதன் சத்தம் கூட இல்லை. கிணற்றுக்குள் சிறுத்தை இருக்கிறது என்று கிராமவாசிகள் உறுதியாக கூறியதால் வன அதிகாரி சித்தராஜூ கிணற்றுக்குள் இறங்கினார்.

ஆனால், அங்கு சிறுத்தை இல்லாதததால் பின்னர் அவரை மேலே இழுத்துவிட்டோம்’ என்றார். இருந்தாலும்கூட, வன அதிகாரி சித்தராஜூ தனது கடமையை நிறைவேற்ற மிகுந்த துணிச்சலுடன் கிணற்றுக்குள் இறங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: