டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 500 விசைப்படகுகள் கரை நிறுத்தம்

ராமேஸ்வரம்: டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில், மீனவர் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் மீனவ பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மீன்பிடி படகுகளுக்கு தேவையான டீசலை உற்பத்தி விலையில் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசைப்படகுகள் மீது எல்லை தாண்டி செல்வதாக மீன்துறை வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். மீன்பிடிக்க செல்லும் படகில் இலங்கை அகதிகளை ஏற்றி செல்லும் விசைப்படகுகளை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது எனவும், 24ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்றே தொடங்கியது.

500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. பகல் 12 மணிக்கு பிறகே வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே 200க்கும் மேற்பட்ட படகுகள் டோக்கன் பெற்று கடலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. 2வது நாளாக இன்றும் மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்தது.

Related Stories: