கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது!: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்திருக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜூலை மாதத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து தினசரி 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 10ம் தேதி முதல் அந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது. குறிப்பாக பெங்களூருவில் தினந்தோறும் 2000 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூர், சாம்ராஜ் நகர், தார்வார் என 12 மாவட்டங்களில் ஒருவார கால ஊரடங்கை கர்நாடக அரசு அமல்படுத்தியிருந்தது. இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணியளவில் நிறைவேறவுள்ள நிலையில், நாளை முதல் எக்காரணம் கொண்டும் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒருவார காலமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் நல்ல வெற்றி கண்டிருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட அனைத்து மாவட்டத்திலும் தற்போது வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. ஆதனால் இனி ஊரடங்கு தேவையில்லை. இந்த ஊரடங்கின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தொழில் மற்றும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு என இரண்டையும் ஒன்றாக தான் எதிர்கொள்ள வேண்டும். இதற்கு மேலாக ஊரடங்கை அமல்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து இந்த கொரோனா வைரஸினை எதிர்கொள்ள முடியாது என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நோய் பரவல் தடுப்பு பணிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Related Stories: