சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: தூத்துக்குடி ஆட்சியர், டி.ஐ.ஜி-க்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் நோட்டீஸ்!

நெல்லை: சாத்தான்குளம் தந்தை - மகன் சித்திரவதை கொலை தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் நெல்லை டி.ஐ.ஜி-க்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. சிபிஐ ஏற்கனவே கஸ்டடியில் எடுத்த நபர்களிடம் விசாரணை முடித்த பிறகு இரண்டாவதாக, கைது செய்யப்பட்ட 5 பேர்களில் 3 நபர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருநெல்வேலியில் சிறுபான்மையினர் நல ஆணையத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல்துறை டிஐஜி ஆகியோருக்கு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதிலிருந்து, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை சிறுபான்மையினர் நல ஆணையமும் கையில் எடுத்துள்ளது தெரியவருகிறது.

இதற்கு முன்பாக இந்த வழக்கினை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது. இதற்கிடையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் மனுக்கள், புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சிபிஐ விசாரணை ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: