கொரோனா தொற்று எதிரொலி: திருக்கோவிலூர் கரூர் வைசியா வங்கியில் 2 ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் 3 நாட்கள் மூடல்!!!

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரூர் வைசியா வங்கியில் 2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் 3 நாட்கள் வங்கியை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் நாள்தோறும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 2388 பேருக்கு கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 1713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், இவற்றில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 663 ஆக உள்ளது. இதனால் மாவட்ட அதிகாரிகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாவட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரூர் வைசியா வங்கியில் கொரோனா பரிசோதையானது நடத்தப்பட்டது. அப்போது வங்கியில் பணிபுரிந்து வந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 நாட்கள் வங்கியை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories: