தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு: உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம்

சென்னை: தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இதற்காக உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கேற்ப, உயர்ந்து வரும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவையினைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில், முக்கிய தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமழக அரசு சார்பில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இடைப்பருவ காலத்தில் காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், எக்டருக்கு ரூ.2,500 வழங்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற, தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில், அதிகபட்சமாக 2 எக்டர் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் பிற திட்டங்களின் கீழ், மானியம் பெறாத விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், மானிய உதவி கிடைப்பதற்கான பருவம், பயிர் மற்றும் இதர விபரங்களைப் பெற தங்கள் பகுதி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: