குற்றச்செயலில் ஈடுபட தடையாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த 3 பேர் கைது

பெரம்பூர்:  குற்ற செயலில் ஈடுபட தடையாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் அந்தந்த காவல் நிலைய போலீசார் மூலம் அதிக அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன்மூலம்  ரவுடிகள் மற்றும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் அதிக அளவில் கைதாகினர். இதனால் சில இடங்களில் சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் திருடப்பட்டுள்ளன. இதேபோல், வியாசர்பாடி நேரு நகர் 3வது தெரு குட்செட் பகுதியில் உள்ள 3 சிசிடிவி கேமராக்களை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர்.

இந்த காட்சிகள்  ஹாட் டிஸ்கில் பதிவாகியிருந்தன. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (19) சக்திவேல் (19) அஜய் (18) ஆகியோர் சிசிடிவி கேமராக்களை உடைத்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

இதில் ஆக்காஷ் குமார் மீது ஒரு கொலை வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் இளைஞர்கள் கஞ்சா அடிப்பது குற்ற செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சிசிடிவி கேமரா அமைக்கப்பட்ட பிறகு அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியாததால் சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்தாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: