நாடு முழுவதும் கொரோனா தீவிரம் ஒரே நாளில் 40,000 பேருக்கு தொற்று: உலக அளவில் நம்பர்-1 இடத்தை நெருங்குகிறது

புதுடெல்லி: நாடு முழுவதும் முதல் முறையாக ஒரே நாளில் 40,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 11 லட்சத்தை தாண்டிய நிலையில், ஒரே நாள் பாதிப்பு, பலி எண்ணிக்கைகளில் உலக அளவில் நம்பர்-1 இடத்தை இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவம் முடிந்தபாடில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் வைரஸ் தொற்று மிக தீவிரமாக இருந்து வந்த நிலையில், பல நாடுகளில் தற்போது பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. அதே சமயம், பிரேசில், இந்தியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு பெருமளவு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்த நிலையில், நேற்று முதல் முறையாக 40 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 40,425 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே பாதிப்பு 40 ஆயிரம் தாண்டுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் மொத்த பாதிப்பு 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 17ம் தேதி மொத்த பாதிப்பு 10 லட்சத்தை கடந்த நிலையில், வெறும் 3 நாளி்ல் 11 லட்சத்தை தாண்டி உள்ளது. இதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 681 பேர் பலியாகி உள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 27,492 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது உலக அளவில் பாதிப்பு (38 லட்சம்) மற்றும் பலி (1.43 லட்சம்) எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

பிரேசில் 21 லட்சம் பாதிப்புடன் 2வது இடத்திலும், இந்தியா 11 லட்சத்துடன் 3வது இடத்திலும் உள்ளன. ஆனால் தினசரி பாதிப்பை பொறுத்த வரையில், கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் அமெரிக்காவுக்குப் பிறகு (65,279) அதிக புதிய வைரஸ் தொற்றை சந்தித்து வரும் நாடு இந்தியா தான். அதே போல, இந்தியாவில் பலியாவோர் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவாக இருப்பதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், ஒரே நாள் பலியில் பிரேசிலுக்கு (716) பிறகு இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேர் பலியாகி உள்ளனர். அந்த வகையில்,  தினசரி பாதிப்பு, பலியில் இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர்-1 இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

* 7 லட்சம் பேர் குணமடைந்தனர்

பாதிப்பு அதிகரித்தாலும், குணமடைவோர் சதவீதமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்று 7 லட்ச்தை தாண்டியது. நாடு முழுவதும் இதுவரை 7 லட்சத்து 86 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் சதவீதம் 62.61 ஆக உள்ளது.

Related Stories: