'நீதிமன்றங்களை திறக்காவிட்டால் கொரோனா வார்டுகளாக மாற்றிவிடலாம்': அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன்

சென்னை: நீதிமன்றங்களை திறக்காவிடில் பள்ளி, கல்லூரிகளை போல நீதிமன்றங்களையும் கொரோனா வார்டுகளாக மாற்றிவிடலாம் என்று அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து வழக்குகளும் காணொளி காட்சி மூலம் நடைபெறுவதால் 90 சதவீத வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால் நீதிமன்றங்களை நிபந்தை இன்றி திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றங்களை திறப்பது தொடர்பாக பிரதமருக்கும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், முதலமைச்சருக்கும் மனு அளித்திருப்பதாக சத்தியசீலன் கூறினார். இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பலர் கண்டுகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற சத்தியசீலன் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் சுமார் 4, 5 மாதங்களாக வேலை இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேளையில் 50 சதவீத ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் திறக்கப்பட்டு வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து தான் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அவ்வாறு நீதிமன்றங்களை திறக்காவிட்டால் கொரோனா வார்டுகளாக மாற்றிவிடலாம் என குறிப்பிட்டார்.

Related Stories: